ஆர்சிபி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-1007765
Sophie Molineux of Royal Challengers Bangalore bowls during match seventeen of the Women’s Premier League 2024 between Delhi Capitals and Royal Challengers Bangalore held at the Arun Jaitley Stadium, New Delhi on the 10th March 2024 Photo by Ron Gaunt / Sportzpics for WPL

டெல்லி: இரண்டாவது சீசனான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் மெக் லெனிங் -ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் குவித்தனர். இதில் 23(18) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29(26) ரன்களைச் சேர்த்திருந்த மெக் லெனிங்கும் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் -அலிஸ் கேப்ஸி ஜோடி அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் அடுத்தடுத்து பவுண்டரியாக விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுமுனையில் அலிஸ் கேப்ஸியும் அதிரடியாக விளையாட இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

இந்நிலையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெமிமா 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58(36) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அலிஸ் கேப்ஸி 8 பவுண்டரிகளுடன் 48(32) ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இறுதியில் களமிறங்கிய ஜெஸ் ஜோனசனும் 1(2) ரன்னுடன் வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது.

ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரெயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், ஷோபனா ஆஷா  1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஸ்மிருதி மந்தனா -சோஃபி மோலினக்ஸ் ஜோடியில் ஸ்மிருதி மந்தனா வெறும் 5(7) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின் சோஃபி மோலினக்ஸுடன் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில்  எல்லிஸ் பெர்ரி 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49(32) ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து 33(30) ரன்கள் எடுத்திருந்த சோஃபி மோலினங்ஸும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த சோஃபி டிவைன்- ரிச்சா கோஷ் ஆகியோர் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக விளாசி அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். இந்நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சோஃபி டிவைன் 26(16) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜார்ஜியா வெர்ஹாம் 12(6) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை போராடிய ரிச்சா கோஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தி வந்த நிலையில், கடைசி பந்தில் ரன் அவுட்டாகி ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே எடுத்தது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அலிஸ் கேப்ஸி, ஷிகா பாண்டே, மரிஸான் கேப், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசன் டபிள்யூபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

1 Comment on "ஆர்சிபி அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி."

  1. Hey there! I know this is kinda off topic but I was wondering if you
    knew where I could find a captcha plugin for my comment form?
    I’m using the same blog platform as yours and I’m having problems finding one?
    Thanks a lot!

Leave a comment

Your email address will not be published.


*