தர்மசாலா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே நடந்தமுடிந்த 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பென் டக்கெட் -ஸாக் கிரௌலி ஜோடி நிதானமான ஆட்டத்தை கையாண்டனர். இதன்மூலம் இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்களைச் சேர்த்தனர்.
அதன்பின் 27(58) ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஒல்லி போப்பும் 11(24) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸாக் கிரௌலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 11 பவுண்டரி, ஒரு சிக்சர் என 79(108) ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் -ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயத்தினர். இந்நிலையில் ஜோ ரூட் 26(56) ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29(18) ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், டாம் ஹார்ட்லி 6(9) ரன்களிலும், மார்க் வுட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் பென் ஃபோக்ஸும் 24(42) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தின் மூன்றாவது செஷனின் தொடக்கத்திலேயே 57.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா-யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி வழக்கம்போல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்திருந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57(58) ரன்களைச் சேர்த்து சோயப் பஷீர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 52(83) ரன்களுடனும், ஷுப்மன் கில் 26(39) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனைத்தொடர்ந்து 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடரவுள்ளது.
Be the first to comment on "இந்திய பந்துவீச்சாளர்களின் அத்தலான பந்துவீச்சில் சுருண்ட இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அபார ஆட்டம்."