தர்மசாலா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இத்தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மார்ச் 7ஆம் தேதியான இன்று தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் அதிரடி இந்த போட்டியிலும் தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், சர்ஃப்ராஸ் கான், தூருவ் ஜுரெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இத்தொடரில் இரண்டு இரட்டை சதத்துடன் 655 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
அவரைத்தொடர்ந்து இத்தொடரில் ஷுப்மன் கில் 342 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 297 ரன்களையும் விளாசியுள்ளனர். மேலும் அறிமுக வீரர்களான சர்ஃப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விதம் அணியின் பேட்டிங் வலிமையை காட்டுகிறது. அதேபோல பந்துவீச்சை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக நடைபெறவிருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதன்மூலம் அஸ்வின் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரைத்தொடர்ந்து கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாக பேட்டிங்கில் சரிவர சோபிக்க தவறிவரும் ராஜத் பட்டிதர் இப்போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டு, அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதற்காக வாஷிங்டன் சுந்தர் இப்போட்டியிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பளித்து, முகமது சிராஜிற்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னனி வீரரான கே.எல்.ராகுல், காயம் காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும் தனது காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றுள்ளார்.
அதேசமயம் பணிச்சுமை காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இந்தியா அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா(கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ராஜத் பட்டிதர்/வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப்/ முகமது சிராஜ்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணியை இந்திய அணி கணித்துள்ளது."