டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனின் 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் மெக் லெனிங் -ஷஃபாலி வர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28(12) ரன்கள் எடுத்திருந்த ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அபாரமான அட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, தொடர்ந்து வந்த அலிஸ் கேப்ஸி 19(20) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53(38) ரன்கள் எடுத்திருந்த மெக் லெனிங்கும் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த, அடுத்த வந்த மரிசேன் கேப் 11(12) ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 69(33) ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. மும்பை அணி தரப்பில் சைகா இஷாக், ஷப்னிம் இஸ்மாயில், பூஜா வஸ்திரேகர், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஹீலி மேத்யூஸ்-யஸ்திகா பாட்டியா ஜோடியில் யஸ்திகா பாட்டியா 6(3) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 5(3), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 6(6) ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான ஹீலி மேத்யூஸும் 29(17) ரன்களுக்கும், அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அமெலியா கெர் 17(20) ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த பூஜா வஸ்திரேகர் -அமஞ்சோத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமஞ்சோத் கவுர் 42(27) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பூஜா வஸ்திரேகர் 17(22), ஹுமைரா காசி 6(8) ஆகியோர் இலக்கை எட்டமுடியாமல் தடுமாறினர்.
இறுதியில் எஸ் சஜனா 24(24) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தும், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனசன் 3 விக்கெட்டுகளையும், மரிசேன் கேப் 2 விக்கெட்டுகளையும், டைட்டாஸ் சாது, ஷிகா பாண்டே, ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Be the first to comment on "லெனிங் மற்றும் ஜெமிமா ஆகியோரின் அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது."