ராஞ்சி: இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி இத்தொடரானது வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஏற்கெனவே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சிஎஸ்கே அணி மீது கூடுதல் கவனத்தை திருப்பியுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து தொடரையும் கேப்டனாக வழிநடத்தியுள்ள எம்எஸ்தோனி இதுவரை 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும் இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் ரோஹித் ஷர்மாவின் சாதனையையும் எம்எஸ்தோனி சமன்செய்துள்ளார்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக எம்எஸ்தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்து வந்த நிலையில், தோனி கடந்தாண்டு இறுதியில் ரசிகர்களின் அன்பிற்காக தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன்காரணமாக நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர்தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அவரது ஓய்வு குறித்து பலராலும் பல்வேறு கருத்துகளும் பேசப்பட்டு வருகின்றன.
இருப்பினும் அவருடைய ரசிகர்கள் நடப்பு சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த பிறகு தான் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தன்னுடைய தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தப் பதிவில், “புதிய சீசனில் ஒரு புதிய ரோலிற்காக காத்திருக்க முடியவில்லை. தொடர்ந்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த தோனியின் ரசிகர்கள் அவருடைய புதிய ரோல் என்னவாக இருக்கும் என ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஏனெனில் ஐபிஎல் தொடரில் இதுவரை தோனியை அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், அணியின் பினீஷராகவும் மட்டுமே ரசிகர்கள் கண்டுள்ளனர். ஆனால் அவர் புதிய ரோல் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதால், ஒருவேளை தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி டாப் ஆர்டரில் களமிறங்கவுள்ளாரா? என ரசிகர்கள் சிந்தித்து வாருகின்றனர். ஏனெனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான டெவான் கான்வே காயம் காரணமாக மே மாதம் வரை கிரிக்கெட் விளையாட முடியாத நிலையில், தோனியின் இந்த பதிவு பல்வேறு ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "ஐபிஎல் 2024க்கு முன்னதாக தோனியின் “புதிய சீசன்- புதிய பங்கு” என்ற பேஸ்புக் பதிவு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது."