பெங்களூர்: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா-மெக் லெனிங் ஜோடியில் ஷஃபாலி வர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13(9) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் தொடர்ந்துவந்த அலிஸ் கேப்ஸி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இந்நிலையில் 27(17) ரன்கள் எடுத்திருந்த அலிஸ் கேப்ஸி தனது விக்கெட்டை இழக்க, மறுபுறம் அரைசதம் கடந்திருந்த மெல் லெனிங்கும் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 55 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7(10) ரன்களிலும், ஜெஸ் ஜோன்சன் 11(7) ரன்களிலும், அனபெல் சதர்லேண்ட் 20(12) ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அருந்ததி ரெட்டியும் 5(9) ரன்களிலும், ராதா யாதவ் 5(7) ரன்களிலும் நடையைக் கட்டினார். ஆனால் இறுதியில் ஷிகா பாண்டே அடுத்தடுத்து ஒருசில பவுண்டரிகளை விளாசி ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் மேக்னா சிங் 4 விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் பெத் மூனி 12(14) ரன்களிலும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 15(10) ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க ,அடுத்து வந்த வேதா கிருஷ்ணமூர்த்தியும் 12(13) ரன்களில் நடையைக் கட்டினார். ஆனால் அதன்பின் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய கேத்ரின் பிரைஸ் 3(6) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷ்லே கார்ட்னரும் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 40(31) ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரியளவில் சோபிக்க தவறியதால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ராதா யாதவ், ஜேஸ் ஜோனசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்து அசத்தியது."