மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதியன்று தர்மசாலாவிலுள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்க உள்ளது.
ஏற்கெனவே இத்தொடரை இங்கிலாந்து அணி இழந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றிபெற முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று இத்தொடரை இந்திய கைப்பற்றியுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியும் ஆர்வம் காட்டி வருகிறது
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னனி வீரரான கே.எல்.ராகுல், அதன்பிறகு காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு, மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ராகுல் இடம்பெறுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவர் தனது காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சைகாக லண்டன் சென்றுள்ளதாக கூறுபடுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கே.எல்.ராகுல் இடத்தில் விளையாடிவரும் ராஜத் பட்டிதார் சொதப்பி வரும் நிலையில், அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல்லிற்கு அந்த இடத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பளித்து, முகமது சிராஜிற்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம் பெறுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது."