பெங்களூர்: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்துமுடிந்த 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஹர்லீஜ் தியோல் – கேப்டன் பெத் மூனி ஜோடியில் பெத் மூனி 8(7) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 5(12) ரன்களிலும், வேதா கிருஷ்ணமூர்த்தி 9(15) ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்லீன் தியோல் 22(31) ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஆஷ்லே கார்ட்னர் 7(12) ரன்களுக்கும், கேத்ரின் பிரைஸ் 3(6) ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த தயாளன் ஹேமலதா -ஸ்நே ராணா ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 12(10) ரன்கள் எடுத்திருந்த ஸ்நே ராணா ஆட்டமிழந்தாலூம், மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தயாளன் ஹேமலதா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31(25) ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்க் கொடுத்தார். இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஸ்மிருதி மந்தனா -சோஃபி டிவைன் ஜோடியில் சோஃபி டிவைன் 6(6) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். அதன்பின் ஸ்மிருதி மந்தனாவுடன் சப்பினேனி மேக்னா ஜோடி சேர்ந்தார். இதில் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43(27) ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த மேக்னா-எல்லிஸ் பெர்ரி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த மேக்னா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36(28) ரன்களையும், எல்லி பெர்ரி 4 பவுண்டரிகளுடன் 23(14) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
This page is phenomenal. The splendid substance exhibits the essayist’s commitment. I’m overwhelmed and expect more such unfathomable posts.