ராஞ்சி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 104.5 ஓவர்களுக்கு 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதில் ஜோ ரூட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து 122(274) ரன்களைச் சேர்த்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 103.2 ஓவர்களுக்கு 307 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சில் 53.5 ஓவர்களுக்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 24(27) ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வல் 16(21) ரன்களுடனும் களமிறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 37(44) ரன்கள் எடுத்திருந்த போது ஜோ ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் 55(81) ரன்களுக்கு டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில் -ரவீந்திர ஜடேஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஜடேஜா 4(33) ரன்களிலும், அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கான் ரன்கள் ஏதுமின்றியும் சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் இறுதியில் கில்லுடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். அதேசமயம் மறுபுறம் பொறுப்புடன் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதில் ஷுப்மன் கில் 52(124)ரன்களையும், துருவ் ஜுரெல் 39(77) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஷுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி."