ராஞ்சி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்துமுடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 104.5 ஓவர்களுக்கு 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸ் முடிவில் 103.2 ஓவர்களுக்கு 307 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்களான பென் டக்கெட் 15(15) ரன்களிலும், ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 11(34) ரன்களிலும் என அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸாக் கிரௌலி -ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் ஸாக் கிரௌலி 60(91) ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4(13) குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும், ஜானி பேர்ஸ்டோவ் 30(42) ஜடேஜா பந்துவீச்சிலும், டாம் ஹார்ட்லி 7(25), ஒல்லி ராபின்சன் 0(3) ஆகியோர் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் களமிறங்கிய பென் ஃபோக்ஸ் 17(76) ரன்களிலும், அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்கள் ஏதுமின்றியும் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 53.5 ஓவர்களுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா 24(27) ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வல் 16(21) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடரவுள்ளது.
Be the first to comment on "சுழற்பந்து வீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சால் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி. இதன்மூலம் எளிய இலக்கை விரட்டும் இந்திய அணி."