மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் வரும் கோடைகாலத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை கோப்பையை வெல்வதற்காக 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் வாங்கியது. இதனைத்தொடர்ந்து அனைத்து அணிகளும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைப்பதற்காக இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன.
இதில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவை அதிரடியாக கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய அணியின் புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இனி வரும் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை எப்படி அசத்தப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதேசமயம் 41 வயதை கடந்துள்ள ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி நடப்பு சீசனுடன் விடை பெறுவாரா என்ற வருத்தமும் காணப்படுகிறது. ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முழங்கால் வலியையும் தாண்டி சிறப்பாக செயல்பட்டு சென்னை சூப்பர் சூப்பர் கிங்ஸ் அணி தனது ஐந்தாவது கோப்பையை வெல்ல உதவிய தோனி ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சமம் செய்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு மூன்று விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் தோனி ஒரு வருடம் கழித்து மீண்டும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே நடப்பாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் 2024 ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வியும் நிலவுகிறது. ஏனெனில் 2009 நடைபெற்ற தேர்தலின் போது மொத்த ஐபிஎல் தொடரும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அதேபோல 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகள் துபாயில் நடைபெற்றது.
இருப்பினும் 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போதும் ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவிலேயே நடைபெற்றது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு போலவே இம்முறை தேர்தல் நடைபெற்றாலும் 2024 சீசன் முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் என்று ஐபிஎல் தொடரின் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் நடப்பு ஐபிஎல் தொடரின் அட்டவணை தேர்தல் தேதிகளை மையப்படுத்தி 2 பகுதிகளாக வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், “நாங்கள் 2024 ஐபிஎல் தொடரை மார்ச் 22 ஆம் தேதி துவங்குவதற்காக பார்க்கிறோம். அதற்காக நாங்கள் அரசு ஏஜென்சிகளுடன் நெருக்கமாக வேலையும் செய்து வருகிறோம். இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் ஆரம்பக்கட்ட அட்டவணையை நாங்கள் முதலாவதாக வெளியிட உள்ளோம். மேலும் இந்த முறை மொத்த தொடரும் இந்தியாவிலேயே நடத்த உள்ளோம்” இவ்வாறு ஐபிஎல் தொடரின் சேர்மன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி முழுப் போட்டியும் இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று ஐபிஎல் தொடரின் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்."