யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார இரட்டை சதம் மற்றும் ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னேறி அசத்தியுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-1005525

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டிலுள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 130.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 445 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 71.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபுறம் ஷுப்மன் கில்லும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்ப, தொடர்ந்துவந்த ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். 

இதனால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. இதில் ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 322 ரன்கள் முன்னிலையுடன் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் தொடக்கம் முதலே கில்லும், குல்தீப் யாதவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 91(151) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து குல்தீப் யாதவும் 27(91) ரன்கள் எடுத்தபோது ரெஹான் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இவர்களைத்தொடர்ந்து மீண்டும் களத்திற்கு வந்த ஜெய்ஸ்வாலுடன் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளாக விளாசித்தள்ளினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் தொடர்ந்து சிக்ஸர்களாக விளாசிய ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஜெய்ஸ்வால் 214(236) ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 68(72) ரன்களையும் சேர்த்தனர். இதனைத்தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் இன்னிங்ஸில் சதமடித்த பென் டக்கெட் 4(15) ரன்களில் ரன் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து 11(26) ரன்களில் ஸாக் கிரௌலியும் பும்ராவிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப் 3(14), ஜோ ரூட் 7(40), ஜானி பேர்ஸ்டோவ் 4(3) ஆகியோர் அடுத்தடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15(39) ரன்களிலும், ரெஹான் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த பென் ஃபோக்ஸ் 16(39) ஜடேஜா பந்துவீச்சிலும் டாம் ஹார்ட்லி 16(36) அஸ்வின் பந்துவீச்சிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில் அதிரடியாக விளையாடிய மார்க் வுட்டும் 33(15) ரன்களைச் சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இதனால் இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 59.52 சதவீத புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

Be the first to comment on "யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார இரட்டை சதம் மற்றும் ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னேறி அசத்தியுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*