ராஜ்கோட்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதியான நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாகச் சேர்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய ஜெய்ஸ்வால் 10(10) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றி மார்க் வுட் வேகத்தில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, தொடர்ந்து வந்த ராஜத் பட்டிதாரும் டாம் ஹார்ட்லி வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 33 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா களத்திற்கு வந்தார். அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் ஷர்மா-ரவீந்திர ஜடேஜா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோஹித் ஷர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இருப்பினும் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 131(196) ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கான் தனது முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடியதுடன் 48 பந்துகளில் அரைசதம் கடந்து தனது வருகையை பதிவுசெய்தார்.
இந்நிலையில் சர்ஃப்ராஸ் கான் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 62(66) ரன்கள் சேர்த்திருந்த போது ரவீந்திர ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய ஜடேஜா தனது 3ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜடேஜா 110(212) ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1(10) ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Be the first to comment on "ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபாரமான சதமும், சர்ஃப்ராஸ் கானின் அதிரடியான ஆட்டமும் முதல்நாள ஆட்டநேர முடிவில் இந்திய அணிக்கு 326 ரன்கள் குவிக்க உதவியது."