ராஜ்காட்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ராஜ்காட்டில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே தனிப்பட்ட காரணங்களால் முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியிருந்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாமலிருந்த கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் உடல் தகுதியை பொறுத்து இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஜடேஜா இந்திய அணியுடன் இணைந்து ராஜ்காட் நகரில் பயிற்சிகளை துவங்கியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்துள்ளன. அதேசமயம் கே.எல்.ராகுல் உடற்தகுதி பெறாத நிலையில், அவர் மூன்றாவது போட்டியிலிருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் அவர் 90 சதவிகிதம் மட்டுமே உடல் தகுதியை எட்டியுள்ளார் என்றும், அவரைத்தொடர்ந்து பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் ராகுல் முழு உடற்தகுதியை எட்டிய பிறகு எஞ்சிய போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் ராஜ்காட் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகின்ற ராகுலுக்கு மாற்று வீரராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இடது கை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேவ்தத் படிக்கல் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் 193, 42, 31, 103, 151, 36 என தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்தது மட்டுமின்றி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் சதமடித்திருந்தார்.
இந்திய ஏ அணிக்காகவும் சரி, ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணிக்காகவும் சரி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ராகுலுக்கு பதிலாக படிக்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் அவருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மூன்றாவது போட்டியில் சில முக்கிய வீரர்கள் இல்லாததால், இந்திய அணி விளையாடி வெற்றி காண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு மாற்றாக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்."