மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே தனிப்பட்ட காரணங்களால் முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகியிருந்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி, மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே விராட் கோலி இல்லாமல் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தொடரின் அனைத்து போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக வெளியான தகவல் இந்திய அணிக்கு பின்னடைவையும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறினர். இருப்பினும் கடைசி மூன்று போட்டிகளில் அந்த இரண்டு வீரர்களும் காயத்திலிருந்து மீண்டு விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜடேஜா மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆனால் கே.எல்.ராகுல் இன்னும் குணமடையாததால் 3வது போட்டியில் விளையாட மாட்டார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே அவருக்கு பதிலாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் கர்நாடகாவை சேர்ந்த தேவதூத் படிக்கல் 3வது போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேசமயம் மூன்றாவது போட்டியில் ராகுலுக்கு பதிலாக ஏற்கனவே அணியில் காத்திருக்கும் மற்றொரு இளம் வீரரான சர்பராஸ் கானும் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்து வந்த சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம்பெற நீண்ட நாட்களாகவே போராடி வந்தார்.
இருப்பினும் சீனியர்கள் இருந்ததால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த இவர், நடப்பு தொடரில் முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியதால் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிகுந்த போராட்டத்திற்கு பின் சர்பராஸ் கான் 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக களமிறங்கப் போகிறார் என்பது பெரும்பாலான ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதேசமயம் இந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.
இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 14 சதங்கள், 11 அரைசதங்கள் உட்பட 3,912 ரன்களை விளாசி இருக்கிறார். மேலும் இவருடைய பேட்டிங் சராசரி மட்டும் 69.85ஆக உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள ஒரே பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் தான். கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், ராகுல் இடத்தில் சர்பராஸ் கான் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் களமிறங்கவுள்ளார்."