டெல்லி: கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி டெல்லி -டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். ரூர்கி அருகே நடந்த இந்த விபத்தின் போது கார் தீப்பற்றியது. இருப்பினும் அதில் சிக்கியிருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தின்போது அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது கணுக்கால், வலது மணிக்கட்டு, கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டது. மும்பையிலுள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ரிஷப் பந்தின் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என எல்லாவித தொடர்களையும் தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் தீவிர பயிற்சியின் காரணமாக உடல்நலன் தேறி வருகிறார். பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற ரிஷப் பந்த் தற்போது கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்றவாரு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அவரை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் ரிஷப் பந்த் நிச்சயம் நடப்பாண்டு ஐபில் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ரிஷப் பந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் ஐபிஎல்-ல் விளையாடுவதில் மிகவும் உறுதியாக உள்ளர். அவர் தற்போது மிகவும் உற்சாகமாக உள்ளார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் விளையாட முடியுமா, கீப்பிங் செய்ய முடியுமா என்பதுதான் தெரியவில்லை. ஏனெனில் ஐஎபில் தொடரில் எங்களது முதல் போட்டிக்கு இன்னும் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ளது. அவருக்கு அணியின் விக்கெட் கீப்பருக்கான இடம் கிடைக்குமா என்பது உறுதியாக எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து நான் அவரிடம் கேட்டால், ரிஷப் பந்த கண்டிப்பாக ’நான் தொடர் முழுவதும் விளையாடுவது மட்டுமின்றி, என்னால் விக்கெட் கீப்பிங்கும் செய்ய முடியும்’ என்று உறுதியளிக்கிறார். அவர் அந்த மனநிலையில் தான் இருக்கிறார்.
அவர் ஆற்றல் மிகுந்த வீரர். அவர்தான் எங்கள் அணியின் கேப்டன். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் நாங்கள் அவரை ரொம்ப மிஸ் செய்தோம். ஏனெனில் அவர் அந்த விபத்தில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டமான ஒன்று. எனவே அவர் இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை என்றாலும், எங்களுக்காக 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது எங்களுக்கு போனஸ் தான்” இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
Be the first to comment on "2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் அனைத்து போட்டியிலும் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் இருக்கிறார்- ரிக்கி பாண்டிங்"