விசாகப்பட்டினம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டனாது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 209 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் சதமடித்து கைகொடுத்தார். ஆனால் அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 255 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் கடின இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் ஸாக் கிரௌலி 29(50) ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 9(8) ரன்களுடனும் களமிறங்கினர். இதில் ரெஹான் அஹ்மத் 23(31) ரன்களின்போது அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிரௌலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் களமிறங்கிய ஒல்லி போப் 23(21) ரன்களிலும், ஜோ ரூட் 16(10) ரன்களிலும் என ஆட்டமிழந்தார்.
அதன்பின் 73(132) ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜானி பேர்ஸ்டோவும் 26(36) ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார். இவர்களைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸும் 11(29) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் ஃபோக்ஸ் -டாம் ஹார்ட்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 8ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 55 ரன்களைச் சேர்த்தனர். இந்நிலையில் 36(69) ரன்கள் எடுத்திருந்த பென் ஃபோக்ஸ் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அறிமுக வீரர் சோயப் பஷீர் ரன்கள் ஏதுமின்றி முகேஷ் குமார் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். இறுதியில் 36(47) ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாம் ஹார்ட்லியும் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 292 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தாப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன்செய்தும் அசத்தியுள்ளது.
Be the first to comment on "பும்ரா மற்றும் அஸ்வினின் அபாரவீச்சால் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி."