விசாகப்பட்டினம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இப்போட்டியில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி பலவீனத்துடன் காணப்படுகிறது.
இருப்பினும் இந்திய அணியில் சர்ஃபாஸ் கான், ராஜத் பட்டிதார் போன்ற அறிமுக வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேசமயம் டாப் ஆர்டர் வீரர்களான ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து சோபிக்க தவறியதால், மீண்டும் அவர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோருடன் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்ப்ர்த் பும்ரா தற்போது சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், முகமது சிராஜின் இடம் கேள்விகுறியாகியுள்ளது.
மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒல்லி போப், டாம் ஹார்ட்லி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும் இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சோயிப் பஷீர் அணியில் இடம்பிடுத்துள்ளார்.
மேலும் கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய மார்க் வுட்டிற்கு பதிலாக இப்போட்டியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ரெஹான் அஹ்மத், ஜோ ரூட் உள்ளிட்டோரும் அணியில் இடம் பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளனர்."