விசாகப்பட்டினம்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடந்தமுடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்காக இவ்விரு அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றனர். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய நட்சத்திர வீரர்கள் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டிக்கான இரண்டாவது அணியிலிருந்து விலகியிருப்பது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் பின்னடைவை தந்துள்ளது.
இதன்காரணமாக கே.எல் ராகுல் இடத்திற்கு ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரும் ஜடேஜாவின் இடத்திற்கு குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். ஏற்கனவே இந்திய அணியின் இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபார்மும் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இருவர்கள் இருவரும் கடந்த போட்டியில் விளையாடிய விதம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஷுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டாகியது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இதனால் இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இருவரையும் நீக்கி புகமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது. இந்நிலையில், ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே தங்களது விளையாட்டில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் அனுபவமில்லாத இளம் பேட்டர்கள் உள்ளனர். அதில் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே பெரிய ஸ்கோரை விளாச வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எனவே நாம் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
ஏனெனில் அவர்கள் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு போட்டிகளில் இன்னும் விளையாடவில்லை. இனி வரும் ஒவ்வொரு போட்டிகளில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்களை எடுப்பார்கள். நான் இதை உறுதியாக நம்புகிறேன்.
அவர்களின் திறமையின் மீது எங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் கிடையாது. தங்களது ஃபார்மை மீட்டெடுக்க அவர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பொதுவாக வீரர்கள் இது போன்ற மோசமான காலங்களையும் ஃபார்மையும் சந்திப்பதுண்டு. இருப்பினும் இதுபோன்ற தருணங்களில் அவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருந்து எப்படி மீள்வதற்கு தயாராகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். அந்த வகையில் இருவரின் செயல்பாடுகளையும் நாங்கள் தொடர்ந்து கண்கானித்து வருகிறோம். அவர்களிடமிருந்து கூடிய விரைவில் பெரிய இன்னிங்ஸ் வரும் என்று எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு விக்ரம் ரத்தோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "வீரர்கள் உள்நோக்கத்துடன் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்."