ஹைதராபாத்: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 25ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து தங்களது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 121 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்களைக் குவித்தது. இதன்காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்தது. இதில் ஒல்லி போப் 148 ரன்களுடனும், ரெஹான் அஹ்மத் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ஒல்லி போப்-ரெஹான் அஹமத் ஜோடியில் ஒல்லி போப் 150 ரன்களை கடக்க, மறுமுனையில் ரெஹான் அஹ்மத் 28(53) ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டாம் ஹார்ட்லி தனது பங்கிற்கு 34(52) ரன்களைச் சேர்த்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க , தொடர்ந்துவந்த மார்க் வுட் ரன்கள் ஏதுமின்றி அஸ்வினிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் மறுமுனையில் இரட்டை சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒல்லி போப் 21 பவுண்டரிகளுடன் 196(278) ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 102.1 ஓவர்களில் 420 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் -ரோஹித் சர்மா ஜோடியில் ஜெய்னதஷ ஸ்வால் 15(35) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாட முற்பட்ட ரோஹித் சர்மா 39(58) ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கே.எல்.ராகுல் 22(48) ரன்களிலும், அக்ஸர் படேல் 17(42) ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 13(31) ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 2(20) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 119 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் -ஸ்ரீகர் பரத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8வது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் பரத் 28(59) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க, மறுமுனையில் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அஸ்வினும் 28(84) ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது.
இறுதியில் அதிரடியாக விளையாட முற்பட்ட முகமது சிராஜும் 12(20) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 69.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Be the first to comment on "டாம் ஹார்ட்லியின் அசத்தலான பந்துவீச்சில் சுருண்ட இந்திய அணி. எனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி."