மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(ஜன. 25) ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஹைத்ராபாத்தில் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலகரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது.
மேலும் விராட் கோலி தன்னுடைய இந்த முடிவு குறித்து கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடம் கலந்து பேசிய பின்னரே முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி விலகியுள்ளார். கோஹ்லியின் இந்த முடிவை மதித்து பிசிசிஐ மற்றும் இந்திய அணி அணி நிர்வாகம் தங்களது ஆதரவை வழங்கியுள்ளது. எனவே, விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அவருக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கமால் இருந்து வந்த நிலையில் விராட் கோலிக்கு பதிலாக யார் அந்த இடத்தில் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் விராட் கோலிக்கு மாற்றாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இவர் சமீபத்தில் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி 151 ரன்களை குவித்திருந்தார். இதன்காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 30 வயதான ராஜத் பட்டிதார் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்தாண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஒரே ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் நிலையில், தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜத் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா(துணை கேப்டன்) , அவேஷ் கான்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பதிலாக ராஜத் பட்டிதார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்."