மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஹைத்ராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இப்போட்டிக்காக இவ்விரு அணி வீரர்களும் நேற்றைய முன்தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோரிடமும் பேசிய விராட் கோலி, எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதே தனது முதன்மையான கடமையாக இருக்கும்.
எனினும் சில தனிப்பட்ட காரணங்கள் மற்றும் சூழ்நிலையை தாம் பார்க்க வேண்டியது இருப்பதாகவும், தமது முழு கவனமும் அந்த தனிப்பட்ட விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்போட்டிகளிலிருந்து விலகுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே கோஹ்லியின் இந்த முடிவை மதித்து பிசிசிஐ மற்றும் இந்திய அணி அணி நிர்வாகம் தங்களது ஆதரவை வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த டெஸ்ட் தொடரில் மீதமுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் கோஹ்லி தனிப்பட்ட காரணத்திற்காக இந்திய அணியிலிருந்து விலகி இருப்பதாகவும் ரசிகர்களும் ஊடகங்களும் அவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும், கோஹ்லியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதேசமயம் கோஹ்லிக்கான மாற்று வீரர் குறித்து பிசிசிஐ எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் கோஹ்லியின் இடத்தில் யார் களமிறங்குவார் என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் இடத்தில் களமிறங்க தயாராகவுள்ள அதேசமயம் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சட்டேஷ்வர் புஜாரா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக்கிற்காக தயாராகவுள்ளார்.
மறுபக்கம் இந்திய ஏ அணியில் விளையாடிவரும் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர்களும் இப்போட்டியில் உள்ளனர். மேலும் இந்திய ஏ அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிங்கு சிங் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது திறனை நிரூபித்துள்ளதால் அவரும் டெஸ்ட் அணிக்கு தேர்வுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கோஹ்லிக்கு மாற்றாக யார் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகல்."