பெங்களூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு 2 போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்- கேப்டன் ரோஹித் ஷர்மா ஜோடியில் ஜெய்ஸ்வால் 4(6) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்துவந்த நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே டக்அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் 1(6) ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, தெடர்ந்துவந்த சஞ்சு சாம்சனும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் ரோஹித் ஷர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிங்கு சிங் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா அரைசதம் கடந்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, மறுமுனையில் ரிங்கு சிங்கும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். கடைசியில் ரோஹித் சர்மா 121(69) ரன்களையும், ரிங்கு சிங் 69(39) ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக 190 ரன்களை குவித்தனர். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரர் ஃபரீத் அஹ்மத் மாலிக் 3 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ்-கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் ஜோடியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் அரைசதம் கடந்த கையோடு குல்தீப் யாதவிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் இப்ராஹிம் ஸத்ரான் 50(41) ரன்களுடனும், அடுத்துவந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் முதல் பந்திலேயும் வாஷிங்டன் சுந்தரிடம் விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நைப் -முகமது நபி ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நபி 34(16) ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தரிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கரிம் ஜானத் 2(2) ரன்களுக்கு ரன் அவுட்டாகியும், நஜிபுல்லா ஸத்ரான் 5(3) ரன்களுக்கு ஆவேஷ் கானிடம் விக்கெட்டை இழந்தும் நடையைக்கட்டினர்.
இதனால் கடைசி ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் குல்பதின் நப் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 55(23) ரன்களைச் சேர்த்து ஸ்கோரை சமன்செய்தார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முதல் பந்தை சந்தித்த குல்பதின் நைப் இரண்டு ரன்கள் ஓட முற்பட்டு ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 ரன்களையும், முகமது நபி 7 ரன்களையும் எடுக்க இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா ஓவரின் முதலிரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை எடுக்க, மூன்றாவது மற்றும் நான்காவது பந்தை சிக்சருக்கு விளாச, கடைசி பந்திற்கு 2 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. அப்போது ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் ரோஹித் சர்மா வெளியேற, ரிங்கு சிங் களமிறங்கினார். ஆனால் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிங்கிள் மட்டுமே அடிக்க மீண்டும் ஸ்கோர் சமனானது.
இதனால் ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா முதலிரண்டு பந்துகளில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி மூன்றாவது பந்தில் ஒரு ரன்னை சேர்த்தார். இதில் அடுத்த பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவும் ரன் அவுட்டானார். இதனால் இந்திய அணி 12 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் களமிறங்கிய முகமது நபி முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரஹ்மனுல்லா குர்பாஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
Leave a comment