இந்தூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தூரிலுள்ள ஹொல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ்-இப்ராஹிம் ஸத்ரான் ஜோடியில் அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 14(9) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான் 8(10) ரன்களுக்கும், அடுத்துவந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2(5) ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பதின் நைப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இருப்பினும் 57(35) ரன்கள் எடுத்திருந்தபோது குல்பதின் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த நட்சத்திர வீரர் முகமது நபியும் 14(18) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் தனது பங்கிற்கு 23(21) ரன்களையும், கரிம் ஜானத் 20(10) ரன்களையும், நூர் அகமது 1(2) ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் முஜீப் உர் ரஹ்மான் 21(9) ரன்களையும், ஃபசல் ஹாக் ஃபரூக்கி ரன்கள் ஏதுமின்றியும் ரன் அவுட்டாகி நடையைக்கட்டினர்.
இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஃப்கானிஸ்தான் அணி 172 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் தூபே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் ஜெய்ஸ்வால் தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் ரோஹித் ஷர்மா முதல் பந்திலேயே ஃபசல் ஹாக் ஃபரூக்கியிடம் ஆட்டமிழந்து டக் அவுட்டாகினார்.
அதன்பின் களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் கோஹ்லி 29(16) ரன்கள் எடுத்திருந்தபோது நவீன்-உல்-ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இவரைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் -ஷிவம் தூபே ஜோடியில் ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபுறம் முகமது நபி வீசிய ஓவரில் துபே ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார்.
அதன்பின் பவுண்டரி மழை பொழிந்த தூபே 22 பந்துகளில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இந்நிலையில் அரைசதம் கடந்திருந்த ஜெய்ஸ்வால் 68(34) ரன்களிலும், தொடர்ந்துவந்த ஜித்தேஷ் சர்மா ரன்கள் ஏதுமின்றியும் கரிம் ஜானத் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
ஆனால் 63(32) ரன்களைச் சேர்த்திருந்த தூபே இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்திருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
Be the first to comment on "ஜெய்ஸ்வால், தூபே ஆகியோரின் அதிரடியால் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி."