ஷிவம் தூபேவின் அதிரடியால் தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10034897
Rohit Sharma of India and Mukesh Kumar of India during the 1st T20I between India and Afghanistan held at the Inderjit Singh Bindra Stadium in Mohali on the 11th January 2024 Photo by Saikat Das / Sportzpics for BCCI

மெஹாலி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் நேற்று விளையாடியது. மெஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ்-கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் ஜோடி முதல் ஒருசில ஓவர்கள் தடுமாறினாலும், அதன்பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

இருப்பினும் குர்பாஸ் 23(28) ரன்கள் எடுத்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஸத்ரான் 25(22) ரன்களை எடுத்து ஷிவம் தூபேவின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.  இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா தனது அறிமுக போட்டியில் வெறும் 3(6) ரன்கள் மட்டுமே எடுத்து அக்ஸர் படேல் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய்-முகமது நபி ஜோடி  அடுத்தடுத்து சிக்சர்களையும், பவுண்டரியையும் விளாசியதோடு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்து மிரட்டினர். இதில் 29(22) ரன்கள் எடுத்திருந்த ஒமர்ஸாய் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நபி 42(27) ரன்கள் எடுத்து முகேஷ் குமாரின் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான் 19(11) ரன்களையும், கரிம் ஜானத் 9(5) ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் தூபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா -ஷுப்மன் கில் ஜோடியில் ரோஹித் ஷர்மா ரன்கள் ஏதுமின்றி கில்லினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இவரைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில்- திலக் வர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அதிரடியாக விளையாட முற்பட்ட கில் 23(22) ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழக்க, மறுபுறம் திலக் வர்மாவும் 26(22) ரன்களுக்கு பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே -ஜித்தேஷ் சர்மா ஜோடி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் 31(20) ரன்கள் எடுத்தபோது ஜித்தேஷ் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த தூபே தனது இரண்டாவது சர்வதேச டி20 அரைசத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின்னரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த தூபே 60(40) ரன்களையும், அவருக்கு துணையாக களமிறங்கிய ரிங்கு சிங் 16(9) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Be the first to comment on "ஷிவம் தூபேவின் அதிரடியால் தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி."

Leave a comment

Your email address will not be published.


*