இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி வருகின்ற ஜூன் 11ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இத்தொடரில் கே.எல்.ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. அதிலும் கடைசியாக நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் இத்தொடரில் சம்பந்தமின்றி நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த தொடரில் துணை கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இத்தொடரில் அணியில் கூட இல்லாதது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்குமுன் நடந்துமுடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இஷான் கிஷன் அணியிலிருந்து விலகினார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பனிச்சுமை மற்றும் மனச்சோர்வை சரி செய்வதற்கு தம்முடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று இஷான் கிஷன் ஓய்வு கேட்டதால் பிசிசிஐயும் அனுமதி வழங்கியது. ஆனால் அந்த இடைவெளியில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால், ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு அவர் தேர்வு செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதேபோல ஸ்ரேயாஸ் ஐயரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால், கோபமடைந்த பிசிசிஐ தங்களிடம் வேறு பொய்யான காரணத்தை சொல்லிவிட்டு நன்னடத்தை மீறி நடந்து கொண்டதால் அவர்களை எதிர்வரும் ஆஃப்கானிஸ்தான் தொடரிலிருந்து நீக்கியதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் ஓய்வின்யின் போது கொண்டாட்டத்துக்கு செல்லக்கூடாது என்று சட்டம் உள்ளதா என்று ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று தெரிவிக்கும் வகையில் ராகுல் டிராவிட் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஷான் கிஷான் நன்னடத்தை பிரச்சனையின் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படாமல் இல்லை. அவர் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரின்போது இஷான் ஒய்வு கேட்டார். நாங்களும் அவருக்கு ஆதரவு கொடுத்தோம்.
அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார் விளையாடுவதற்கு தயாராக இல்லை. ஓய்வு முடிந்ததும் மீண்டும் அவர் தேர்வு செய்யப்படுவதற்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாடி தன்னை தயார்படுத்துவார். அதேபோல ஸ்ரேயாஸ் ஐயரும் ஒழுங்கு பிரச்சனை காரணமாக தேர்வு செய்யப்படாமல் இல்லை. தற்போதைய அணியில் நிறைய பேட்டர்கள் இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்படவில்லை. இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படாததுக்கு உண்மையான காரணம் இதுதான்” இவ்வாறு டிராவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
Be the first to comment on "ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 அணியிலிருந்து இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டது குறித்து ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்."