நியூ டெல்லி: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடினர். அதன்பிறகு கிட்டத்தட்ட 14 மாதங்களாக எவ்வித டி20 போட்டிகளிலும் அவர்கள் இருவரும் பங்கேற்காமல் ஓய்விலிருந்து வந்தனர். இந்நிலையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நடப்பாண்டு ஜூன் 1ஆம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கி, ஜூன் 29ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளிலுள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது. இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் விளையாடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. அதேசமயம் இவர்கள் இருவருமே இந்த டி20 உலகக்கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்கள் அணிக்குள் வருவார்களா? அப்படி வந்தால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் இடம்பெறுவார்களா என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பிசிசிஐக்கு இளம் வீரர்களை கொண்டே டி20 உலககோப்பையை அணுக திட்டமிட்டு இருக்கிறது. அதனால் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் இருவரும் இடம்பெறுவார்களா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்படடள்ளது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி தோல்வியடைந்தால் குறைகூற ஆரம்பித்து விடுகிறார்கள். அதேசமயம் இந்திய அணி அடையும் வெற்றியை யாரும் அவ்வளவாக கொண்டாடுவதில்லை. இந்திய அணி மிகச் சிறப்பான அணி. ஒவ்வொரு போட்டியிலும் நமது வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் மிக முக்கியமான போட்டிகளில் அதிர்ஷ்டம் இல்லாததால் நமக்கு வெற்றி தவறிவிடுகிறது.
வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்த வேண்டும். விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அந்த அணியில் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட கோஹ்லி இடம்பெற வேண்டும். 14 மாதங்களுக்குப் பிறகு அவர் அணியில் இடம்பெற்றாலும், அவரது ஆட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெஸ்வால் சிறப்பாக விளையாடினார்.
ஜெய்ஸ்வால் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தில் இருக்கிறார். அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு போட்டியில் தோற்றால் கூட விமர்சனங்கள் பல வரும். இந்தியா வலிமையான அணி. இந்திய அணி விளையாடியிருக்கும் விதத்தினைப் பாருங்கள். ஒருநாள் தொடரை வென்றுள்ள அவர்கள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளார்கள்” இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இடம்பெறவேண்டும் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்."