கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே செஞ்சுரியனில் நடந்துமுடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கேப்டவுன் நகரில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத்தொடர்ந்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில், அடுத்து 6 விக்கெட்டுகளில் எந்த ஒரு ரன்னையும் எடுக்கமால் ஆட்டமிழந்தது.
இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஸ்கோரில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணி எனும் மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதன்பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து நேற்று ஐடன் மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 7 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் பெட்டிங்ஹாம் 11(12) ரன்களில் பும்ராவிடம் ஆட்டமிழக்க, தெடர்ந்துவந்த கைல் வெர்ரைனை 9(7), மார்கோ ஜான்சென் 11(9), கேசவ் மகாராஜ் 3(4) ஆகியோரும் அடுத்தடுத்த ஓவர்களில் பும்ரா பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஐடன் மார்க்ரம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு முன்னிலையையும் பெற்றுக்கொடுத்தார். இருப்பினும் 106(103) ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து ஓவரிலேயே காகிசோ ரபாடா 2(12) ரன்னுடன் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் லுங்கி இங்கிடியும் 8(10) ரன்களில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ரோஹித் சர்மா ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 28(23) ரன்களைச் சேர்த்து நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஷுப்மன் கில் 10(11) ரன்களுக்கு காகிசோ ரபாடா பந்துவீச்சிலும், நட்சத்திர வீரர் விராட் கோலி 12(11) ரன்களுக்கு மார்கோ ஜான்சென் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர்.
இருப்பினும் இந்திய அணி 12 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ள இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் இலக்கை எட்டிய அணி எனும் சாதனையையும் படைத்துள்ளது. மேலும் கேப்டவுனில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்த முதல் ஆசிய அணி எனும் பெருமையை பெற்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 26 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
Be the first to comment on "ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார பந்துவீச்சால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை சமன்செய்தது இந்திய அணி."