கேப் டவுன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கேப் டவுனில் நடைபெறவுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறவிருக்கும் இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதேசமயம் தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் சொதப்பிய இந்திய அணி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதன்காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6ஆவது இடத்திற்கு சரிந்த இந்திய அணி குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதற்குமுன் சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல முதல் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தார். எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு முகேஷ் குமாரும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா அறிமுகப் போட்டியில் தடுமாறிய பிரசித் கிருஷ்ணா மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த மாதிரியான பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வேண்டும் என்பதை பற்றி பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திடம் நீண்ட நேரம் பேசினோம்.
இப்போட்டியில் விளையாடுவதற்கு அனைத்து வீரர்களும் காயமின்றி தயாராக இருக்கின்றனர். காயங்கள் குறித்த கவலை இம்முறை இல்லை. அதேசமயம் யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி முதல் நாள் மாலையில் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க உள்ளோம். நான் எங்களுடைய அணியின் பந்துவீச்சு கூட்டணியில் அனுபவமின்மை இருப்பதாக கருதுகிறேன். இதுபோன்ற தருணங்களில் அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கையை காட்ட வேண்டும்.
ஏற்கனவே நான் சொன்னது போல பிரசித் கிருஷ்ணா தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கி விளையாடினார். அனைத்து வீரர்களுமே தங்களுடைய முதல் போட்டியில் விளையாடும் போது சற்று பதற்றத்துடன் தடுமாறுவது வழக்கம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நல்ல திறமை கொண்டுள்ள அவர் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவார் என்று நான் நம்புகிறேன். எனவே ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுப்பது மிக முக்கியம்” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
Leave a comment