மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் மொத்தம் 9 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி தன் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமையான இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்க் ஃபார்மில் கவனம் செலுத்த வேண்டும். ஹர்மன்ப்ரீத் கவுர் டெஸ்ட் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு முடிவுகளுடன் தனது அணியை அனைவரும் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அதேசமயம் அவர் பேட்டிங்கில் போராடியதையும் கண்டது. நடந்துமுடிந்த இந்த சீசனில் எட்டு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், அதில் மூன்றுமுறை மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்துள்ளார்.
கடந்தமாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 49 ரன்கள் எடுத்ததே அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், கவுர் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றதால், கவுர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை.
இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், ஹர்மன்ப்ரீத் கவுர் 9 மற்றும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன்காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பிப்ரவரி 2007க்குப் பிறகு இன்றுவரை ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி ஒருமுறை கூட ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை அமைந்தாலும், ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணி மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.
ஏனெனில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் 7 கேட்சுகளை தவறவிட்ட கவர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. அதேசமயம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரிச்சா கோஷ் 113(96) ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44(55) என டாப் ஆர்டரில் ஆக்ரோஷமான பேட்டர்கள் இருந்தாலும், இந்தியாவுக்கான ஆட்டத்தை முடிக்க முடியாத அமன்ஜோத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மா போன்றவர்கள் மீதுதான் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
ஏனெனில் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலியிடம் இருந்து பெரிய ரன்கள் காத்திருக்கிறது. ஹீலியும் தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் ஸ்கோர் செய்து வருகிறார். அவரும் இதுவரை பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே நடந்துமுடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்த ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகிய இருவரிடமிருந்து வானவேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
Leave a comment