செஞ்சூரியன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து தங்களது முதலாவது இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களைச் சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று 11 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணியின் டீன் எல்கா் 140 ரன்களுடனும், மாா்கோ ஜான்சென் 3 ரன்களுடனும் தொடங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜான்சென் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுமுனையில் டீன் எல்கர் 185(287) ரன்கள் எடுத்தபோது ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய கெரால்டு கோட்ஸி 19(18) ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த காகிசோ ரபாடா 1(9) ரன்னுடனும் , நந்த்ரே பர்கர் ரன்கள் ஏதுமின்றியும் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினர். இறுதியில் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக பேட்டிங் செய்ய வராததால் 108.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் எடுத்திருந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 84(147) ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெஸ்ய்வால் 5(18) ரன்களில் வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஷுப்மன் கில் -விராட் கோலி ஜோடியில் 26(37) ரன்கள் எடுத்திருந்த கில்லின் விக்கெட்டை மார்கோ ஜான்சென் யார்க்கர் மூலம் கைப்பற்றினார்.
இருப்பினும் கோஹ்லி ஒருமுனையில் ரன்குவிப்பில் ஈடுபட, மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் 6(12) ரன்களிலும், கே.எல்.ராகுல் 4(24) ரன்களிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும், ஷர்துல் தாக்கூர் 2(8) ரன்களிலும் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினர். இறுதியில் களமிறங்கிய பும்ரா ரன்கள் ஏதுமின்றி ரன் அவுட்டாகியும், முகமது சிராஜ் 4(5) ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 76(82) ரன்களைச் சேர்த்திருந்த கோஹ்லியும் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 34.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நந்த்ரே பர்கர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Leave a comment