செஞ்சூரியன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனிலுள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ராகுல் 70 ரன்களுடனும், முகமது சிராஜ் ரன்கள் ஏதுமின்றியும் களமிறங்கினர். இதில் முகமது சிராஜ் 5(22) ரன்களில் கெரால்டு கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராகுல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இருப்பினும் ராகுல் 101 ரன்கள் எடுத்திருந்த போது நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான ஐடன் மார்க்ரம் 5(17) ரன்களில் முகமது சிராஜிடம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின் தொடக்க வீரரான டீன் எல்கருடன் டோனி டி ஸோர்ஸியும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்கர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸோர்ஸி 28(62) ரன்களுடனும், தொடர்ந்து வந்த கீகன் பீட்டர்சன் 2(7) ரன்களுடனும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த பெடிங்ஹாம் 56(87) ரன்கள் எடுத்தபோது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கைல் வெர்ரையன் 4(7) ரன்களில் பிரசித் கிருஷ்ணாவிடம் விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து எல்கருடன் மார்கோ ஜான்சென் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அப்போது இரண்டாம்நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க அணி இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களைச் சேர்த்தது. இதில் எல்கர் 140 ரன்களுடனும், ஜான்சென் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளனர். இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி 11 ரன்கள் முன்னிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Leave a comment