மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 77.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய மகளிர் அணி 126.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 406 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களைச் சேர்த்தது.
இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய மகளிர் அணி 46 ரன்கள் முன்னிலையுடன் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை அனபெல் சதர்லேண்ட் 12 ரன்களுடனும், ஆஷ்லே கார்ட்னர் 7 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இதில் கார்ட்னர் 7(27) ரன்களிலேயே பூஜா வஸ்திரேகர் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அனபெல் 27(102) ரன்களுடனும், அலானா கிங் ரன்கள் ஏதுமின்றியும் ஸ்நே ரானா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் களமிறங்கிய வீராங்கனைகளான ஜெஸ் ஜோனாசென் 9(42) ரன்கிளிலும், கிம் கார்த் 4(8) ரன்கிளிலும் ராஜேஸ்வரி கயக்வாட் பந்துவீச்சில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததால், இரண்டாவது இன்னிங்ஸின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியால் 261 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்நே ரானா 4 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா -ஸ்மிருதி மந்தனா ஜோடியில் ஷபாலி வர்மா 4(4) ரன்களில் கிம் கார்த் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ரிச்சா கோஷ் 13(32) ரன்னுடன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனால் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 38(61) ரன்களுடனும், அவருடன் இணைந்து பொறுப்புடன் விளையாடிவந்த ஜெமிமா ரோட்ரிகஸ் 12(15) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்து வெற்றிக்கு உதவினர்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ட்ரா 4 தோல்விகளுக்கு பின்னர் இந்திய மகளிர் அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக வலம்வரும் ஆஸ்திரேலியாவை 10 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்கடித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
Leave a comment