பார்ல்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்லிலுள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன் – ராஜத் பட்டிதார் ஜோடியில் தனது அறிமுக போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் 22(16) ரன்களில் நந்த்ரே பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சுதர்ஷன் வெறும் 10(16) ரன்களில் பியூரன் ஹென்ட்ரிக்ஸிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் -கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும் 21(35) ரன்கள் எடுத்திருந்த ராகுல் வியான் முல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசி அசத்தினார்.
அதேசமயம் சாம்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. இந்நிலையில் அரைசதம் விளாசிய திலக் வர்மா 52(77) ரன்கள் எடுத்திருந்தபோது கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அனைவருக்கும் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
அதன்பின் 108(114) ரன்களை விளாசிய சாம்சன் ரிசாத் வில்லியம்ஸிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அக்ஸர் படேல் 1(3) ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 14(9) ரன்களுடனும் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங்கும் 38(27) ரன்களில் நாந்த்ரே பர்கரிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 296 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான ரீஸா ஹென்றிக்ஸ் -டோனி டி ஸோர்ஸி ஜோடியில் ஹென்றிக்ஸ் 19(24) ரன்களுக்கு அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேற, தொடர்ந்துவந்த வேண்டர் டுசென் 2(17) ரன்களில் அக்ஸர் படேலிடம் ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து ஸோர்ஸியுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடிய ஸோர்ஸி அரைசதம் விளாச, மறுமுனையில் 36(41) ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம் வாஷிங்டன் சுந்தரிடம் ஆட்டமிழந்தார்.
இவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸோர்ஸியும் 81(87) ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர்களான ஹென்றிச் கிளாசென் 21(22) ரன்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சிலும், வியான் முல்டர் 1(3) ரன்னுடன் வியான் முல்டர் பந்துவீச்சிலும், டேவிட் மில்லர் 10(20) ரன்களில் முகேஷ் குமார் பந்துவீச்சிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த கேசவ் மகாராஜ் 14(27) ரன்களுடனும், லிசாத் வில்லியம்ஸ் 2(3) ரன்னுடனும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பியூரன் ஹென்றிக்ஸ் 18(26) ரன்களில் ஆவேஷ் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்திருந்து. இதன்மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Be the first to comment on "சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது."