க்கெபர்ஹா: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
க்கெபர்ஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்ஷன் -ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியில் நாந்த்ரே பர்கர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ருதுராஜ் அடுத்த பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த திலக்வர்மாவும் 10(30) ரன்களில் பர்கரிடமே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவர்களைத்தொடர்ந்து சுதர்ஷனுடன் இணைந்த கேப்டன் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சுதர்சன் அரைசதம் விளாசி அசத்தினார். அதன்பின் சுதர்சன் 62(83) ரன்கள் எடுத்தபோது லிசாட் வில்லியம்ஸ் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12(23) ரன்களில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ராகுல் 56(64) ரன்களுக்கு நாந்த்ரே பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரிங்கு சிங் 17(14) ரன்களிலும், குல்தீப் யாதவ் 1(5) ரன்னுடனும் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினார். இறுதியில் அக்ஸர் படேல் 7(23) ரன்களில் ஐடன் மார்க்ரம் பந்துவீச்சிலும், அர்ஷ்தீப் சிங் 18(17) ரன்களில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சிலும், ஆவேஷ் கான் 9(9) ரன்களில் ரன் அவுட்டாகியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இந்திய அணி 46.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இலங்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான டோனி டி ஸார்ஸி -ரீஸா ஹென்ரிக்ஸ் ஜோடி தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 52(81) ரன்கள் எடுத்திருந்த ரீஸா அர்ஷ்தீப் சிங்கிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இறுதியில் ரஸ்ஸி வேண்டர் 36(51) ரன்களுடன் ரிங்கு சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் 119(122) ரன்களைச் எடுத்திருந்த டோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 42.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
Be the first to comment on "டோனி டி ஸார்ஸியின் அபார சதத்தால் இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணி."