நியூ டெல்லி: ஐபிஎல் 2024 தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நிறைய ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தலைமையில் முதல் கோப்பையை வெல்வதற்கே திண்டாடி வந்த மும்பை அணி, கடந்த 2013ஆம் ஆண்டில் ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
அதுமட்டுமின்றி 2013 முதல் 2020 வரை அணியின் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி மொத்தம் 5 கோப்பைகளை வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா மிகக் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக மாற்றி சாதனை படைக்க வைத்தார். அதன்காரணமாகவே அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் முன்னேறி 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்று சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையில் வளர்ந்த ஹர்திக் பாண்டியா, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பாண்டியா தலைமையில் ரோஹித் ஷர்மா விளையாடுவதை பார்க்க விரும்பாத ரசிகர்கள் மும்பை அணியின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக ரோஹித் ஷர்மா பதவி நீக்கப்பட்ட ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மும்பை அணியை ஃபாலோ செய்வதை நிறுத்தி தங்களது உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற விஷயங்களில் ரசிகர்கள் செண்டிமெண்ட் பார்ப்பதற்கு எந்த அவசியமும் இல்லை என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவால் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் ரோஹித் ஷர்மா சுதந்திரமாக விளையாடுவதை ரசிகர்களால் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது போன்ற விஷயத்துக்காக யாரும் ரோஹித் ஷர்மா குறித்து சென்டிமென்ட்டாகவோ உணர்ச்சிகரமாகவோ நினைக்கக்கூடாது. மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்த முடிவு சரியானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் கேப்டனாக தம்மை நிரூபித்துள்ள ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே உங்களுக்கு தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் டி20 கேப்டன் மற்றும் சிறந்த வீரர் கிடைத்துள்ளார்.
மறுபுறம் பார்த்தால் ரோஹித் ஷர்மா நீண்ட காலமமாக மும்பை அணியில் இருந்து வருகிறார். ஆகையால் ஹர்திக் பாண்டியா போன்ற ஒருவரை கேப்டனாக கொண்டிருப்பது கிரிக்கெட்டை அர்த்தப்படுத்துகிறது. இந்த சமயத்தில் பாண்டியா அழுத்தத்தை உணர மாட்டார் என்று நம்புகிறேன். ஏனெனில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிறைய ஆதரவு கொடுக்கிறது” இவ்வாறு மஞ்சுரேக்கர் செய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். இதையடுத்து வருகின்ற 2024 டி20 உலகக்கோப்பையிலும் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்."