ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான ரீசா ஹென்ட்ரிக்ஸ்-டோனி டே ஜோர்ஸி ஜோடியில் ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றி அர்ஷ்தீப் சிங் வேகத்தில் கிளீன் போல்டாக, அடுத்துவந்த ரஸ்ஸி வான் அடுத்த பந்திலேயே கோல்டன் டக்அவுட்டாகி நடையைக்கட்டினார்.
ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடி 28(22) ரன்கள் எடுத்திருந்த ஜோர்ஸி அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசென் 6(9) ரன்களில் அர்ஷ்தீப் சிங்கிடம் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 10 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது.
இவர்களைத்தொடர்ந்து 12(21) ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 10.1ஆவது ஓவரிலேயே ஆவேஷ் கான் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, அடுத்த பந்திலேயே வியான் முல்டர் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 2(7) ரன்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேசவ் மகாராஜ் 4(7) ரன்களில் ஆவேஷ் கானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அண்டில் பெஹ்லுக்வேயோ அணிக்கு ஓரளவு ரன்கள் சேர்த்தார். இருப்பினும் 33(49) ரன்கள் எடுத்திருந்த போது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேற, கடைசியாக குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு 7(32) ரன்கள் எடுத்திருந்த நாந்த்ரே பர்கர் விக்கெட் கைப்பற்றவே தென்னாப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 5(10) ரன்களுக்கு வியான் முல்டர் பந்துவீச்சில் எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் தொடக்க வீரரான சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயரும் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். இந்நிலையில் நிதானமாக விளையாடிய சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாச, மறுபுறம் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் 52(45) ரன்கள் எடுத்தபோது அண்டில் பெஹ்லுக்வேயோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் 55(43) ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதனால் இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
Be the first to comment on "அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி."