குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்க அணி, இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது இந்திய அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10050211

ஜோஹன்னஸ்பர்க்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் -ஷுப்மன் கில் ஜோடியில் கில் 8(6) ரன்களுக்கு எல்பிடபள்யூ முறையிலும், அடுத்த பந்திலேயே திலக் வர்மா ரன்கள் ஏதுமின்றியும் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆடட்மிழந்து நடையைக்கட்டினர்.

ஆனால் அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து வந்த நிலையில், ஜெய்ஸ்வால் 60(41) ரன்கள் எடுத்திருந்தபோது டப்ராயிஸ் ஷாம்சியிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

இவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் 14(10) ரன்களில் பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருப்பினும் 100(56) ரன்கள் எடுத்திருந்த சூர்யக்குமார் லிசாட் வில்லியம்ஸிடம் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ஜித்தேஷ் ஷர்மா 4(4) ரன்னுடனும், ஜடேஜா 4(2) ரன் அவுட்டாகியும் நடையைக்கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான மேத்யூ பிரீட்ஸ்கீ 4(3),ரீஸா ஹென்றிக்ஸ் 8(13) ஆகியோர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் 25(14) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 5(5), டோனவன் ஃபெரேரா 12(11), பெஹ்லுக்வாயோ 0(3), கேசவ் மகாராஜ் 1(3), பர்கர் 1(3), லிசாத் வில்லியம்ஸ் 0(2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 35(25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை இழக்கும் வாய்ப்பை தவிர்த்தது. 

Be the first to comment on "குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்க அணி, இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது இந்திய அணி."

Leave a comment

Your email address will not be published.


*