மும்பை: இந்தியாவில் நடந்துமுடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை திருவிழாபோல் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுன.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணியை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி கோப்பையை வென்றது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை வெல்ல முடியாததால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்திலேயே கண்கலங்கினார்கள். இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என தெரியவில்லை என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “சுமார் ஒரு மாதம் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து எங்களால் வெளிவர முடியவில்லை. இந்த தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான ஐடியா என்னிடம் இல்லை.
எனக்கு முதல் சில நாட்களில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் அந்த சமயங்களில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருந்தது எனக்கு ஓரளவு உதவியாக இருந்தது. அதை ஜீரணிப்பது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் வேறு வழி கிடையாது. இதனை கடந்துதான் போக வேண்டும். ஆனால் உண்மையாக அதிலிருந்து நகர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் சிறுவயதிலிருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதில் உலகக் கோப்பையை வாங்க வேண்டும் என்பதுதான் நான் வெல்ல விரும்பிய மகத்தான பரிசு.
கடந்த பல வருடங்களாக இதற்காக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. அதனால் இப்போது அதைபற்றி நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது. ஏனெனில் வெற்றிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் கொடுத்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் தொடர்ச்சியான 10 வெற்றிகளை பெற்றதை நான் சொல்வேன்” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Be the first to comment on "ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியிவிருதந்து என்னால் மீண்டு வெளிவர முடியவில்லை- ரோஹித் ஷர்மா"