டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த பின், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. அந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் 7ஆம் தேதிவரையும் நடைபெறவுள்ளது.
இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. ஆனால் தற்போது இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால், இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தொடர் என்றாலே தென்னாப்பிரிக்க மண்ணில் விராட் கோலி குறித்து பேசாமல் இருக்க முடியாது. டெஸ்ட் தொடர்களில், தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் கோஹ்லி, தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார. இதுவரை அங்கு 14 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 51.36 சராசரியுடன் இரண்டு சதங்கள், 3அரைசதங்கள் உட்பட 719 ரன்களை குவித்து இருக்கிறார்.
இதன்காரணமாகவே, விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதேசமயம் கோஹ்லியும் தற்போது சரியான ஃபார்மில் இருக்கிறார். மேலும் தென்னாப்பிரிக்க பிட்ச்களில் இருக்கும் எக்ஸ்ட்ரா பவுன்சர்களை கோஹ்லியால் மிகச்சிறப்பாக கையாள முடியும் என்பதால், இந்தமுறை இரட்டை சதத்தை பூர்த்தி செய்யவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜாக்கஸ் காலிஸ், தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற என்ன வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், ”விராட் கோலி மிகச்சிறந்த வீரர். கோஹ்லிக்கு இதுவரை தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் வெற்றிகரமாக விளையாடிய அனுபவம் போதுமான அளவுக்கு இருக்கிறது. அவர் அந்த அனுபவங்களை சக வீரர்களுக்கு, குறிப்பாக இளம் வீரர்களுக்கு கூறியிருப்பார். தென்னாப்பிரிக்கா சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது, எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும், இங்கே போட்டியின்போது என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்த யோசனைகளை இளம் வீரர்களுக்கு புரியும்படி கோஹ்லி கூறியிருப்பார். இதனால், இத்தொடரில் இளம் வீரர்களும் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்கா போன்ற சவால்மிக்க நாடுகளில், மிகச்சிறப்பாக விளையாட வேண்டும் என்றுதான் கோஹ்லி விரும்புவார். கடினமான பிட்ச்களில் ரன்களை குவிப்பதுதான் கோஹ்லிக்கு பிடிக்கும். தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர், இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவதில் நிச்சயம் பெரும் பங்கு வகிப்பார் என நம்புகிறேன். கோஹ்லி அதிக ரன்களை குவித்தால், இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என நம்புகிறேன்” இவ்வாறு ஜாக்கஸ் காலிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "அந்த ஒரு இந்திய வீரர் ரன் குவித்தால் மட்டுமே டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என தென்னாப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்."