ஷ்ரெயங்கா பாட்டில் மற்றும் சைகா இஷாக் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இந்திய மகளிர் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-10050185

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து, இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான மையா பௌச்சர் ரன்கள் ஏதுமின்றியும்,  சோபியா டங்க்லி 11(10) ரன்களும் எடுத்திருந்த நிலையில் ரேணுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் 7(16) ரன்களுக்கு சைகா இஷாக் பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.

ஆனால் அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் – எமி ஜோன்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஜோன்ஸ் 25(21) ரன்களிலும் ,டேனியல் கிப்சன் ரன்கள் ஏதுமின்றியும் சைகா இஷாக் பந்துவீச்சில் வெளியேற , தொடர்ந்து வந்த பெஸ் ஹெத் 1(5), ஃப்ரெயா கெம்ப் 0(1) , சோபி எக்லெஸ்டோன் 2(7) ஆகியோர் ஷ்ரெயங்கா பாட்டில் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை  இழந்தனர்.

ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ஹீதர் நைட் 52(42) ரன்கள் எடுத்திருந்த போது அமஞ்ஜோத் கவுர் வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே மஹிக்கா கௌர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடியில் ஷஃபாலி வர்மா 6(6) ரன்களுக்கு ஃப்ரெயா கெம்ப் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின் மந்தனாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் 29(33) ரன்கள் எடுத்திருந்த ரோட்ரிக்ஸ் சார்லி டீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து வந்த தீப்தி ஷர்மா 12(11) ரன்களில் ஃப்ரெயா கெம்ப் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனால் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 48(48) ரன்களில் சோபி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிச்சா கோஷும் 2(4) எக்லெஸ்டோனிடமே விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் அதன்பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். 

இதனால் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஏற்கனவே இந்திய அணி தொடரை இழந்தாலும், இந்த வெற்றியின் மூலம் ஒயிட்வாஷ் ஆவதை தவிர்த்துள்ளது. 

Be the first to comment on "ஷ்ரெயங்கா பாட்டில் மற்றும் சைகா இஷாக் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இந்திய மகளிர் அணி."

Leave a comment

Your email address will not be published.


*