டர்பன்: நடந்துமுடிந்த ஆஸ்திரேலியாவுகாகு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யக்குமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் தென்னாப்பிரிக்க தொடரில் நிச்சயமாக அடி வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “பும்ராவைத் தவிர தற்போது இந்திய அணியில் இறுதிக்கட்டத்தில் பந்து வீசக்கூடிய தகுதியான வீரர்கள் யாரும் இல்லை என்று தான் நான் கூறுவேன். இது டி20 உலகக்கோப்பையில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.
எனவே நாம் உடனடியாக இறுதிகட்ட ஓவரை வீசக்கூடிய வீரர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையான போட்டிகள் பகலில் தான் நடைபெறும். அப்போது பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் அர்ஷ்தீப் சிங் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.
இருப்பினும் கடைசியாக நடந்துமுடிந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னாள் அவர் எப்படி பந்து வீசினாரோ அதேபோல தற்போது செயல்படவில்லை. இவரைப்போல தான் ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோரும் செயல்படுகிறார்கள். இதன்காரணமாக இந்திய அணிக்கு நிச்சயமாக இறுதிகட்ட ஓவரை யார் வீசுவது என்பது பெரிய கவலையை கொடுக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் நிச்சயம் இதில் கவனம் செலுத்தி அதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எல்லாம் வெற்றி பெறாது. அப்படி வெல்ல வேண்டுமென்றால் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. நடந்துமுடிந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் அவர்கள் பிரமாதமான ஆட்டத்தை எல்லாம் வெளிப்படுத்தவில்லை.
எனினும் தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஒருவேளை நான் சொல்வது தவறாக கூட போய் முடியும். அப்படி நடந்து இந்தியா வென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.
இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தம் 8 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சில போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே 5-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது” இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்படவில்லை, இந்தியாவின் டெத் பவுலிங் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்."