மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான சோபியா டங்க்லி -டேனியல் வையட் ஜோடியில் டங்க்லி 1(2) ரன்னுடன் ரேணுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அலிஸ் கேப்ஸி ரன்கள் ஏதுமின்றி அவரிடமே விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் அதன்பின்னர் டேனியல் வையட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின்னரும் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 138 ரன்களைச் சேர்த்தனர். இருப்பினும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வையட் 75(47) ரன்கள் எடுத்திருந்தபோது சைகா இஷாக் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் ஹீதர் நைட் 6(7) ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்ரேயங்கா பாட்டீலிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நாட் ஸ்கைவர் 77(53) ரன்களைச் சேர்த்து ரேணுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இறுதியில் எமி ஜோன்ஸ் தனது பங்கிற்கு 23(9) ரன்களை சேர்த்து பினீஷிங் கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடியில் ஸ்மிருதி 6(7) ரன்களில் நாட் ஸ்கைவர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் 4(8) ரன்களுக்கு ஃப்ரேயா கெம்ப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷஃபாலி வர்மா -கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்மன்ப்ரீத் 26(21) ரன்களுக்கு சோபி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரிச்சா கோஷும் 21(16) ரன்களில் சாரா க்ளென் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ஷஃபாலி 52(42) ரன்களுக்கு சோபி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கனிகா அகுஜாவும் 15(12) எக்லெஸ்டோனிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் பெரியளவில் சோபிக்கத் தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Be the first to comment on "இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சில் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி."