13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. வழக்கமாக ஐ.பி.எல். ஏலம் பெங்களூருவில் நடைபெறும். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
மொத்தம் 8 அணிகளில் 73 இடங்கள்
நிரப்ப வேண்டி உள்ளது. இதில் வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக 29 பேரை தேர்வு செய்யலாம்.
ஏலப்பட்டியலில் 186 இந்தியர்கள், 146 வெளிநாட்டவர் என்று மொத்தம் 332 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒரே நாள் நடைபெறும் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலப்பட்டியலில் 35 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பிடித்து
இருக்கிறார்கள்.
சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 85 பந்துகளில் சதம் விளாசி
மிரட்டிய ஹெட்மயரின் தொடக்க விலை ரூ.50 லட்சம் ஆகும். அவரை வாங்குவதற்கு அணிகள் ஆர்வம்
காட்டலாம்.
கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய வீரர் ராபின் உத்தப்பா, இந்த ரஞ்சி
சீசனில் தொடக்க ஆட்டத்திலேயே சதம் அடித்துள்ளார். 34 வயதான உத்தப்பா விக்கெட் கீப்பராகவும்
பணியாற்றக்கூடியவர். அதனால் அவரை வாங்குவதற்கு கணிசமான போட்டி இருக்கும். ஏலப்பட்டியலில்
இடம் பிடித்துள்ள குறைந்த வயது வீரர் ஆப்கானிஸ்தானின் நூர் அகமது. 14 ஆண்டு 350 நாட்கள்
நிரம்பிய இவர் ‘சைனாமேன்’ வகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 19 வயதுக்குட்பட்டோருக்கான
இந்திய தொடரில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்த நூர் அகமதுவின் தொடக்க விலை
ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘நம்பர் ஒன்’ டெஸ்ட் பவுலர் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ்,
பிஞ்ச், கேரி, ஸ்டோனிஸ், தென்ஆப்பிரிக்காவின் மோரிஸ், டேவிட் மில்லர், இங்கிலாந்து
வீரர்கள் மோர்கன், ஜாசன், சாம்குர்ரன், டாம் பான்டன், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர்கள்
கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், வெஸ்ட் இண்டீசின் காட்ரெல் ஆகியோர் மீதும் கவனம் பதிந்துள்ளது.
8 அணிகளின் நிர்வாகிகள் தங்கள் அணிக்கு எந்தெந்த வீரர்கள் தேவை? என்பதை இப்போதே கணக்கு
போட்டு வைத்துள்ளனர். யார்-யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து
தான் பார்க்க வேண்டும்.
ஏலத்தில் செலவிட அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடி கையிருப்பு
உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 வீரர்கள் தேவையாகும். அவர்களிடம் ரூ.14.60
கோடி இருப்பு உள்ளது.
Be the first to comment on "யார்-யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறதோ, கொல்கத்தாவில் இன்று ஐ.பி.எல். ஏலம்"