பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றிபெற்றது.

www.indcricketnews.com-indian-cricket-news-10050111

பெங்களூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஏற்கனவே நடந்துமுடிந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இத்தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் -ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 21(25) ரன்கள் எடுத்து ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கெய்க்வாட் 10(12) ரன்களில் பென் துவார்ஷூயிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5(7) பென் துவார்ஷூயிஸ் பந்துவீச்சிலும், ரிங்கு சிங் 6(8) தன்வீர் சங்கா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் ஐயர் -ஜித்தேஷ் சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் 24(16) ரன்கள் எடுத்து ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் வெளியேற, தொடர்ந்துவந்த அக்ஸர் படேல்  சீரான வேகத்தில் ரன்களை குவித்து வந்த நிலையில் 31(21) ரன்கள் எடுத்திருந்தபோது  ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபிடம் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் 53(37) ரன்களுடன் நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரவி பிஷ்னோய் 2(2) ரன்களில் ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான ஜோஷ் பிலீப் 4(4) ரன்களில் முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் – பென் மெக்டர்மோட் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இந்நிலையில் ஹெட் 28(18) ரன்கள் எடுத்திருந்தபோது ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஆரோன் ஹார்டி 6(10) பிஷ்னோய் பந்துவீச்சிலும், டிம் டேவிட் 17(17) அக்ஸர் படேல் பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுமுனையில் சிக்சர்களாக விளாசி அரைசதம் கடந்த பென் மெக்டர்மோட் 54(36) ரன்களில் அர்ஷ்தீப் சிங்கிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மேத்யூ ஷார்ட் 16(11) ரன்களுக்கும், பென் துவார்ஷூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும் முகேஷ் குமாரின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். 

இறுதியில் கேப்டன் மேத்யூ வேட்டும் 22(15) ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த வீரர்களாலும் இலக்கை எட்ட முடியாததால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Be the first to comment on "பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றிபெற்றது."

Leave a comment

Your email address will not be published.


*