தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து விலகும் விராட் கோலி.

www.indcricketnews.com-indian-cricket-news-10050096

மும்பை: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் வீரர்கள் பெரும்பாலானோர் தற்போது வரை ஓய்வில் உள்ளனர். இதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டும்தான் உலகக்கோப்பை தொடரைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பிரசித் கிருஷ்ணா ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் இடம்பெறாத நிலையில், இஷான் கிஷன் முதல் இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மான் கில்லுக்கு பதிலாக விளையாடினார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவின் காயத்திற்கு பின் அணியில் இணைந்து இறுதிப்போட்டி வரை மொத்தம் 7 போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.

அந்தவகையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் டிசம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ராய்ப்பூர் மற்றும் பெங்களூரு நகரங்களில் நடைபெற இருக்கிறது.

இந்திய ரசிகர்கள் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பின் சற்று துவண்டுள்ள நிலையில், அடுத்த மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில்  மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம்தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார் என்று விராட் கோலி தரப்பில் இருந்து தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,  காலவரையறையின்றி ஒயிட் பால் கிரிக்கெட்டில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என பிசிசிஐயிடம் விராட் கோலி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் மட்டுமின்றி ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரிலும் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. மேலும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் பிசிசிஐ வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”விராட் கோலி பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களிடம் தனக்கு லிமிடெட் எடிஷன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு தேவை என்றும், அடுத்து அவர் எப்போது ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறார் என்பது குறித்து அவர்களிடம் விராட்டே தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார். அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போவதாக பிசிசிஐக்கு அறிவித்துள்ளார், அதாவது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுகிறார்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Be the first to comment on "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து விலகும் விராட் கோலி."

Leave a comment

Your email address will not be published.


*