கௌகாத்தி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுவரும் நிலையில், மூன்றாவது டி20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்வாட் -யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் ஜெய்ஸ்வால் 6(6) ரன்களுக்கு ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி கேன் ரிச்சர்ட்சனிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இவர்களைத்தொடர்ந்து ருதுராஜ் கெய்வாட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சூர்யகுமார் யாதம் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் வழக்கம்போல் தனது அதிரடியைக் காட்டினார். இருப்பினும் சூர்யகுமார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 39(29) ரன்களுடன் ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமலர்ச்சி அதிரடி காட்டத்தொடங்கிய கெய்வாட் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின்னரும் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்த கெய்க்வாட் 123(57) ரன்களையும், திலக் வர்மா 31(24) ரன்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்-ஆரோன் ஹார்டி ஜோடியில் ஹார்டி 16(12) ரன்களுடன் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஜோஷ் இங்கிலிஸ் 10(6) ரன்களில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 35(18) ரன்களில் ஆவேஷ் கானிடம் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17(21) ரன்களுக்கு அக்ஸர் படேலிடமும், டிம் டேவிட் ரன்கள் ஏதுமின்றி ரவி பிஷ்னோயிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிளென் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இருப்பினும் கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மேக்ஸ்வெல் 47 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 104(48) ரன்களையும், கேப்டன் மேத்யூ வேட் 28(16) ரன்களையும் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Be the first to comment on "ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி சதம் வீண், கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி நீரில் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது."