குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10050078

மும்பை: இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களையும், தக்க வைக்கும் வீரர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

அந்த வகையில் நேற்று 10 ஐபிஎல் அணிகளுமே தங்களது அணியில் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் அமைப்புக்கு சமர்ப்பித்தது. இதில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக 15 கோடிக்கு டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது குஜராத் அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகிய ஷுப்மன் கில் அந்த அணியில் இருந்து 2022ஆம் ஆண்டு கழட்டி விடப்பட்ட நிலையில், குஜராத் அணிக்காக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு சீசன்களாக விளையாடி வந்தார். இதுவரை குஜராத் அணிக்காக 16 போட்டியில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 483 ரன்களை குவித்துள்ளார்.

அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி நடந்துமுடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது. அதேசமயம் அந்த இரண்டு தொடர்களிலும் ஷுப்மன் கில் தனது அட்டகாசமான பங்களிப்பை குஜராத் அணிக்கு வழங்கியிருந்தார். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஷுப்மன் கில் இதுகுறித்து பேசுகையில், “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இவ்வளவு அருமையான அணியை வழிநடத்துவதற்காக என் மேல் நம்பிக்கை வைத்த குஜராத் அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தொடரில் நான் குஜராத் அணியை வழிநடத்த ஆவலோடு காத்திருக்கிறேன். அந்த தொடரை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுவோம்’ இவ்வாறு ஷீப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*