விசாகப்பட்டினம்: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஸ்டீவ் ஸ்மித்-மேத்யூ ஷார்ட் ஜோடியில் ஷார்ட் 13(11) ரன்களில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
இதில் நிதானமாக விளையாடி வந்த ஸ்மித் 52(41) ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டாகி வெளியேற, மறுமுனையில் அதிரடி காட்டிய இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தியதுடன், அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
இருப்பினும் இறுதியில் இங்கிலிஸ் 110(50) ரன்கள் எடுத்தபோது பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 7(6) ரன்னும், டிம் டேவிட் 19(13) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்- ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியில் கெய்க்வாட் ஒரு பந்து கூட அடிக்காமல் டைமண்ட் டக் அவுட் முறையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஜெய்ஸ்வால் 21(8) ரன்களில் மேத்யூ ஷார்ட பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிஷன்- கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி காட்டினார். இதில் இஷான் 37 பந்துகளில் அரைசதம் விளாச, சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் இஷான் 58(39) ரன்கள் எடுத்தபோது தன்வீர் சங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த திலக் வர்மாவும் 12(10) அவரிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யக்குமார் 80(42) ரன்களில் ஜேசன் பேரான்டோர்ப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அக்ஸர் படேல் 2(6) சீன் அபாட் பந்துவீச்சிலும், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ரன் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தாலும் சீன் அபாட் கடைசி பந்தை நோ பாலாக வீசியதன் மூலமகாக இந்தியா 19.5 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
Be the first to comment on "சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் அதிரடியால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றிபெற்றது."