மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 16 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் டிராபியை வென்றுள்ளன.
இந்நிலையில் ஐபிஎல்-ன் 17ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் வீரர்கள் ஏலம் நடப்பாண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்கவிருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரும் அணியும் தங்கள் அணியில் விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வருகின்ற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால், ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தநிலையில் ஐபிஎல் தொடரில் 2022-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது .தனது ஐபிஎல் வாழக்கையை 2019ஆம் ஆண்டு தொடங்கிய படிக்கல் 2021ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் படிக்கல் விளையாடியிருந்தார். இறுதிப்போட்டி வரை வந்த சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இத்தொடரில் படிக்கல் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி 122.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 376 ரன்கள் எடுத்திருந்தார்.
இதுவரை 57 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட 1521 ரன்கள் குவித்துள்ள தேவ்தத் படிக்கல், ராஜஸ்தான் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 637 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 2022-ம் ஆண்டு முதல் லக்னோ அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. அவேஷ் கான் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2017 இல் பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியில் தொடங்கினார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைவதற்கு முன்பு வரை, 2018-2021 என மொத்தம் நான்கு சீசன்களில் விளையாடியுள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய அவேஷ் கான் தனது அற்புதமான செயல்பாடுகளால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியில் அவேஷ் கான் ஒரு அங்கமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 47 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் லக்னோ அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Be the first to comment on "தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும், அவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் மாற்றம் ஆகியுள்ளனர்."